1984 போபால் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை
திங்கள், சூன் 7, 2010
- 21 ஏப்பிரல் 2014: முக நூல் காதலால் விபரீதம்
- 13 அக்டோபர் 2013: மத்தியப் பிரதேசத்தில் கோயில் நெரிசலில் சிக்கி 60 பேர் வரையில் உயிரிழப்பு
- 2 சூன் 2013: இலங்கையில் சீதைக்குக் கோவில், இந்தியா அறிவிப்பு
- 4 பெப்பிரவரி 2013: சட்டவிரோத டைனசோர் முட்டை விற்பனையைத் தடை செய்ய இந்தியா திட்டம்
- 23 திசம்பர் 2011: 1984 போபால் நச்சுக் கசிவு: குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை
1984 ஆம் ஆண்டில் நச்சுவாயுக் கசிவு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாயிருந்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட எட்டு பேருக்கு இன்று இந்திய போபால் நகர நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
உலகின் மிகப்பெரும் தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படும் யூனியன் கார்பைட் எனும் உயிர்க்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பேரழிவு நடந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் முதன்முறையாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் இறந்து விட்டார் எனவும் ஏனையோர் மேன்முறையீடு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றவாளிகளுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், இத்தீர்ப்பு காலம் கடந்தது எனவும் கூறி போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சில தன்னார்வ சேவை அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாளன்று போபால் நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் உயிர்க்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். கிட்டத்தட்ட 600,000 இவ்வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை பெற்றவர்களின் விபரம்: கேசுப் பகிந்திரா, இந்திய நிறுவனத்தின் தலைவர், வி.பி.கோகலே, முகாமைப் பணிப்பாளர், கிஷோர் கம்தார், பிரதித் தலைவர், ஜே. முகுந்த், தொழிற்துறை முகாமையாளர், ராய் சவுத்திரி (இறந்துவிட்டார்), பிரதித் தொழிற்துறை முகாமையாளர், எஸ்பி சவுத்திரி, கே.வி, செட்டி, எஸ்ஐ. குரேசி. இவர்கள் அனைவரும் இந்தியர்கள்.
விபத்து நடந்த போது யூனியன் கார்பைட்டின் தலைவராக இருந்த வாரன் அண்டர்சனும் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். ஆனால் இத்தீர்ப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
யூனியன் கார்பைட்ட் நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் $470 மில்லியன்களை இழப்பீடாக இந்திய அரசுக்குக் கொடுத்திருந்தது.
மூலம்
[தொகு]- Bhopal trial: Eight jailed over India gas disaster, பிபிசி, ஜூன் 7, 2010
- Bhopal tragedy: Convicts get 2 years imprisonment, த இந்து, ஜூன் 7, 2010
- போப்பால் பேரழிவு