உள்ளடக்கத்துக்குச் செல்

திசைநாயகத்துக்கு சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 25, 2010

பிரித்தானிய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது இலங்கையின் தமிழ் ஊடகவியலாளரான ஜெ. சி. திசைநாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


திசைநாயகம் நடத்திவந்த பத்திரிகையில் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கட்டுரைகளை எழுதி வந்தார் எனக் கூறி 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். இந்த ஆண்டு சனவரி மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


வன்முறையைத் தான் ஆதரித்ததாக கூறப்படுவதை திசைநாயகம் மறுத்துள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.


செய்தியாளர் ஒருவர் தமது பணிக்காக கைது செய்யப்பட்டதற்கு திசைநாயகம் ஓர் எடுத்துக்காட்டு என அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சென்ற ஆண்டு கூறியிருந்தார்.


”இலங்கை, மற்றும் சில நாடுகளில் ஊடகத்துறை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது,” என பிரித்தானிய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் பொப் சாட்ச்வெல் பிபிசி சிங்கள் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.


"இப்படி ஒருவரின் நிலையை நாம் எடுத்துக்கூறுவதன் மூலம், அவர் வசிக்கும் நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தம் கொடுக்கப்படும். பேச்சுச் சுதந்திரம், அத்னூடாக ஊடக சுதந்திரம் இவற்றுக்காகவே நாம் குரல் கொடுக்கிறோம்,” என்றார் அவர்.


கடந்த செப்டம்பர் மாதம் தைரியமாகவும் தார்மீக முறையிலும் தனது பத்திரிகையாளர் பணியைச் செய்துவந்ததாக கூறி பாரிசைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் எல்லைகளில்லா செய்தியாளர்கள் அமைப்பு” திசைநாயகத்துக்கு விருது வழங்கியது.


இரு மாதங்களுக்கு முன்னர் வேறொரு ஊடகவியலாளர் காணாமல் போனது குறித்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் “எல்லைகளில்லாத செய்தியாளர்கள் அமைப்பு” கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேட்டிடருந்தது.


கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையில் ஒன்பது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படுகொலைகளில் தாம் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அரசு தெரிவிக்கிறது.

மூலம்

[தொகு]