’2005 யூ55’ என்ற மாபெரும் சிறுகோள் பூமியைக் கடந்து சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 9, 2011

400 மீட்டர் அகலமான சிறுகோள் ஒன்று நேற்று பூமியைக் கடந்து சென்றதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். 2005 யூ55 என்ற இச்சிறுகோள் 30,000 மைல்/மணி வேகத்தில் சென்றுள்ளது.


2005 யூ55 சிறுகோள்

கடந்த 200 ஆண்டுகளில் பூமிக்கு மிகக் கிட்டவாக வந்த சிறுகோள் இதுவேயாகும். அத்துடன் 1976 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பூமிக்குக் கிட்டவாக வந்த மிகப்பெரும் விண்பாறையும் இதுவேயாகும். இது போன்ற பெரிய சிறுகோள் அடுத்த தடவை 2028 ஆம் ஆண்டிலேயே பூமிக்குக் கிட்டவாக வரும்.


இச்சிறுகோள் கருமை நிறத்திலும், கிட்டத்தட்ட உருளை வடிவிலும் காணப்பட்டது. 20 மணித்தியாலத்திற்கு ஒரு முறை சுழன்றபடி சென்றது.


இச்சிறுகோள் நேற்று செவ்வாய்க்கிழமை கிரீனிச் நேரம் 23:28 மணிக்கு பூமிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது. பூமியின் நடுப்பகுதியில் இருந்து குறைந்தது 324,600 கிமீ உயரத்தில் சென்றது என நாசா தெரிவித்துள்ளது. இது வியாழக்கிழமை வரை பூமியைக் கடந்த படி செல்லும்.


"2005 யூ55 குறைந்தது அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு பூமியைத் தாக்காது," என நாசா வானியலாளர் லான்ஸ் பென்னர் தெரிவித்தார். மிக்கக்கிட்டவாக வந்ததனால் இச்சிறுகோளை மிகவும் ஆழமாகப் படிக்க முடிந்ததாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கலிபோர்னியா, மற்றும் புவெர்ட்டோ ரிக்கோ ஆகிய இடங்களில் உள்ள வானொலி தொலைநோக்கிகள் இச்சிறுகோளில் இருந்து வெளிவந்த வானொலி எதிரொலிகளைப் பதிந்துள்ளன. இதன் மூலம் இச்சிறுகோள் எதனால் ஆனது, மற்றும் இதன் வடிவம் போன்றவற்றைத் துல்லியமாகக் கூற முடியும்.


2005 யூ55 போன்ற அப்போஃபிஸ் என்ற சிறுகோள் 2029 ஆம் ஆண்டிலும் பின்னர் 2036 இலும் பூமியை நோக்கி வருகின்றன. இது பெரும்பாலும் பூமியை மோதும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அப்போஃபிசுவால் பூமிக்கு சேதம் எதுவும் இராது என இப்போது கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது 2029 ஏப்ரல் 13 இல் பூமிக்குக் கிட்டவாக 29,500 கிமீ தூரத்தில் செல்லும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]