உள்ளடக்கத்துக்குச் செல்

பூமியை 7,600 மைல் தொலைவில் கடந்து சென்ற சிறுகோள்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 29, 2011

2011 எம்டி என்ற சிறுகோள் (asteroid) பூமியை 7,600 மைல்களுக்குக் கிட்டவாகக் கடந்து சென்றது. இந்தச் சிறுகோள் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க மூன்றரை மணி நேரம் தாமதித்து பூமியைக் கடந்துள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்தனர். இது விண்ணில் உள்ள கழிவுப் பொருள் என முன்னர் கருதப்பட்டிருந்தது.


2011 எம்டி சிறுகோளின் பாதை

நேற்று முன்தினம் சூன் 27 ஆம் நாள் 1700 UTC மணிக்கு இச்சிறுகோள் அத்திலாந்திக் பெருங்கடலுக்கு மேலாக எவ்வித சேதமும் எற்படுத்தாமல் கடந்து சென்றது. இந்தச் சிறுகோளைக் கடந்த வாரத்திலேயே வானியலாளர்கள் கண்டுபிடித்தனர். நியூ மெக்சிக்கோ, சொக்கோரோ என்ற இடத்தில் உள்ள விண்தொலைநோக்கி மூலம் இது சூன் 21 ஆம் நாளில் கண்டுபிடிக்கப்பட்டது.


82 அடி அகலம் கொண்ட 2011 எம்டி என்ற இந்த சிறுகோள் தாம் கணித்த பாதையிலேயே பூமியைக் கடந்துள்ளதாக நாசா கூறியது. இது சென்ற தூரம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் தூரத்தை விட 30 மடங்கு அதிகமாகும். விண்வெளி நிலையம் 250 மைல் தூரத்திலேயே பூமியைச் சுற்றி வருகிறது.


இந்தப் பருமனான சிறுகோள்கள் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை அணுகுகிறது. ஆனாலும், இவ்வாண்டு ஆரம்பத்தில், இதனை விடச் சிறுகோள் ஒன்று 3,500 மைல் தூரத்தில் பூமியைக் கடந்து சென்றுள்ளது. 2011 எம்டி பூமியை நோக்கி வந்திருந்தாலும், அது வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்திருக்கும் எனவும், பூமியில் சேதம் எதனையும் ஏற்படுத்தியிருக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது.


"கடந்த மில்லியன் ஆண்டு காலமாக பூமியை இவ்வாறான விண்கற்கள் தாக்கி வருகின்றன. மூன்றில் இரண்டு மைல் பருமனான விண்கற்கள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்து. இப்படியானவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூமியைத் தாக்குகின்றன. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மாக்களை பூமியில் இருந்து அழித்தது ஆறு மைல் பருமனான ஒரு சிறுகோள் எனவே அறிவியலாளர்கள் நம்புகின்றனர். அறிவியலாளர்கள் இவற்றை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். நாசா இது வரையில் பூமியை நோக்கி வந்துள்ள 8,110 சிறுகோள்கள், மற்றும் வால்வெள்ளிகளை அவதானித்துள்ளனர். இவற்றில், 1,237 பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனக் கணிக்கப்பட்டுள்ளது," என கலிபோர்னியாவைச் சேர்ந்த நாசா அறிவியலாளர் டொன் யோமன்ஸ் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]