மன்னார் மீன்பிடித்துறைப் பிரச்சினை: அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு

விக்கிசெய்தி இலிருந்து
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:

வியாழன், சூலை 26, 2012

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கோந்தைப்பிட்டி என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர்களுக்கும், தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிபதியை தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பாக இலங்கையின் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு எதிராக மூத்த சட்டத்தரணிகள் இணைந்து வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளனர்.


அமைச்சருக்கு எதிராக இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் கிளை சங்கம் ஒன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அமைச்சர் ரிசாட் பதியுதீனை செப்டம்பர் 5 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. முறையீட்டாளர்களையோ அல்லது சாட்சிகளையோ அமைச்சர் அச்சுறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் மீனவர்கள் கோந்தைப்பிட்டிக்குச் சென்று அங்கிருந்த தமிழ் மீனவர்களின் மீன்வாடிகள், மீன்பிடி படகுகள் ௭ன்பவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதனை அடுத்து தமிழ் மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அவர்களுக்குக் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மன்னார் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை முஸ்லிம் மீனவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், தமிழ் மீனவர்கள் உடனடியாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் ௭னக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நீதிமன்றத்திற்கும் மன்னார் நீதவானுக்கு ௭திராகவும் அவர்கள் குரல் ௭ழுப்பினர். காவல்துறையினர் மீதும், நீதிமன்றக் கட்டிடத்தின் மீதும், வாகனங்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது, மூன்று உயர் அதிகாரிகள் உட்பட ஆறு காவல்துறையினரும், பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர். மன்னார் மேல் நீதிமன்றத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.


இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்குப் பின்னணியில் இலங்கை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்னார் நீதவானை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து அவரது தீர்ப்பு பிழையானது ௭ன்றும், இதனால் மன்னார் பற்றி ௭ரியும் ௭ன்று தெரிவித்திருந்ததாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், இக்குற்றச்சாட்டை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மறுத்துள்ளார்.


மன்னார் நீதவான் செய்த முறைப்பாடு தொடர்பாக முறையான விசாரணை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.


மூலம்[தொகு]