உள்ளடக்கத்துக்குச் செல்

கொங்கோவில் எண்ணெய்த் தாங்கி வெடித்ததில் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 4, 2010

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் எண்ணெய்த் தாங்கி ஏற்றி வந்த பாரவுந்து ஒன்று கவிழ்ந்து வெடித்ததில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டனர். அருகில் உள்ள கிராமம் தீப்பற்றி எரிந்தது.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசு

புருண்டியின் எல்லையில் அமைந்துள்ள தெற்கு புக்காவு மாகாணத்தில் சாங்கே என்ற ஊரில் வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கொடூர விபத்து நடந்துள்ளது. இறந்தவர்களில் 61 பேர் குழந்தைகள் என்றும், 36 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 196 பேர் படுகாயமடைந்தனர்.


கொல்லப்பட்டவர்களில் பலர் திரையரங்கு ஒன்றினுள் இருந்தவர்கள் எனவும் சிலர் தாங்கியில் இருந்து ஒழுகிய எண்ணெயை சேகரிக்க முயன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.


காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் கொங்கோவில் நிலை கொண்டுள்ள ஐநாவின் அமைதிப்படையினரும் உதவி வருகின்றனர்.


பல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். திரையரங்கில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண வந்திருந்தவர்கள் பெரும்பாலும் உயிரிழந்திருக்கின்றனர்.


இறந்தவர்களின் உடல்கள் பெரும்தொகையாக புதைகுழி ஒன்றில் போடப்பட்டு மூடப்ப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.


தன்சானியாவில் இருந்து வந்து கொண்டிருந்த சுமையுந்து ஒன்றில் இருந்து எண்ணெய் ஒழுகத் தொடங்கியதென்றும், இதனையடுத்து அங்கு குழுமிய பொது மக்கள் எண்னெயை சேகரிக்கத் தொடங்கினார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில நிமிட நேரத்தில் எண்ணெய்த் தாங்கி வெடித்துச் சிதறியது. தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.


"ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் அரசுப் படையினரும் எண்ணெயைக் களவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்," என ஒருவர் தெரிவித்தார்.

மூலம்

[தொகு]