இலங்கையில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 17, 2011

இலங்கையின் 234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு முதலாவது முடிவு இன்று இரவு 11.00 மணியளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று அரலகன்வில என்னும் இடத்தில் தேர்தல் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது இன்று காலை நடத்தப்பட்ட கிரனைட் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாக அரலகன்வில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மொத்தமுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் காரணமாக 301 உள்ளூராட்சி சபைகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து யாழ்ப்பாணம் உட்பட 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது. இந்தப் பத்து சபைகளுக்கும் 96 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச சபை பிரிவுகளில் கண்ணிவெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல், அங்கு மீள்குடியேற்றம் நடைபெறாத காரணத்தினால் இந்த சபைகளுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேச சபைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால், அந்த சபைக்குரிய தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு பிரதேச சபைக்கான தேர்தலே நடைபெறுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]