உள்ளடக்கத்துக்குச் செல்

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, பெப்பிரவரி 27, 2010


தாய்லாந்திலிருந்து நாடு கடந்த நிலையில் வாழும் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் சொத்திலிருந்து 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை தாய்லாந்து அரசாங்கம் பறிமுதல் செய்ய முடியும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.


முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ரா

தாய்லாந்தில் 2006-ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியின்போது தக்சின் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அவரது சொத்துகளை நீதிமன்றம் முடக்கி வைத்தது.


சினவத்ராவுக்கு சொந்தமான மொத்த சொத்தில் இது அரைவாசிப்பங்காகும். சினவத்ரா பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில், தனது குடும்பத்துக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு செல்வம் குவித்தார் என்றும் அவர் ஈட்டிய லாபத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பறிமுதல் தொகைக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


நான்கு வருடங்களுக்கு முன்னர் இராணுவப் புரட்சி ஒன்றினால் பதவி கவிழ்க்கப்பட்ட தக்சினுக்கு தாய்லாந்தில் இன்னமும் செல்வாக்கு உள்ளது. தனது ஆட்சி காலத்தில் தவறு செய்ததாகக் கூறப்படுவதை தக்சின் மறுத்து வருகிறார்.


நீதிமன்றத் தீர்ப்பு தக்சினுக்கு பாதகமாக இருப்பதால் அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை முன்னிட்டு தாய்லாந்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.


பாங்கொக்கில் முக்கிய இடங்களில் கூடுதலாக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இன்னும் இரண்டு வாரங்களில் பேங்காக்கில் அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய பேரணியை நடத்த தக்சின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடப் போவதாக தக்சின் கூறி வருகிறார். தாய்லாந்தில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது முதல் வெளிநாட்டில் வசித்து வரும் தக்சின் தற்போது துபாயில் இருந்து வருகிறார்.


தீர்ப்புக் கூறப்பட்டவுடன் துபாயில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் உரையாற்றினார்.

"இது முழுமையானதொரு அரசியல் சதி. இத்தீர்ப்பினை அரசாங்கம் ஏற்கனவே அறிந்திருந்தது," என அவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


"எனது 30 பில்லியன் (பாட்) சொத்துக்களை என்னிடம் திருப்ப ஒப்படைப்பதற்கு அவர்களுக்குக் கருணை இருந்திருக்கிறது," என அவர் கூறினார்.

மூலம்

[தொகு]