எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு சிறந்த ஊடகவியலாளருக்கான விருதுகள்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 3, 2011

ஈழத்து எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாளர் விருதுகளை இலங்கை பத்திரிகை நிறுவனம் வழங்கியுள்ளது.


கடந்த வாரம் கொழும்பு கல்கிசையில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இரண்டு விருதுகள் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டன. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாளர் என்ற விருதும், 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாளர் என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.


வன்னி மக்களின் நெருக்கடி மிக்க பிரச்சினைகளை செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் புகைப்படங்களாகவும் இவர் வெளியிட்டு வந்தவர். இலங்கைப் பத்திரிகைகளில் வடகிழக்கு மக்களின் பிரச்சினைகள், உரிமைகள் தொடர்பில் தீபச்செல்வன் எழுதி வருகிறார்.


1983 இல் பிறந்த தீபச்செல்வன், கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிகிறார்.


மூலம்[தொகு]