உள்ளடக்கத்துக்குச் செல்

டெங்கு நிகழ்வில் கலந்து கொள்ளாத பிரதேச சபை அதிகாரியை மரத்தில் கட்டினார் பிரதி அமைச்சர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 4, 2010

இலங்கை பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, களனி பிரதேச சபை அதிகாரி ஒருவரை மரம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை அன்று கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டம், ஒன்று தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர் ஐந்து அதிகாரிகளை அழைப்பு விடுத்திருந்தார். ஒரு அதிகாரி வரத் தவறியதை அடுத்து அவரை அழைத்த அமைச்சர், அவரை மாமரம் ஒன்றில் கட்டி வைத்ததாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


மாமரத்தில் பிரதேச சபை அதிகாரி கட்டி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பெண் அதிகாரி ஒருவர் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, அவரை அமைதியாக இருக்குமாறும் இல்லாவிடில் அவரையும் மரத்தில் கட்டுவேன் என்று அப்பெண்ணை பிரதியமைச்சர் எச்சரித்துள்ளார்.


டெங்கு நோய் தடுப்பு வேலைத்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக பல ஊடகவியலாளர்களை அமைச்சர் அழைத்திருந்தார். இதனால் இந்த நிகழ்ச்சிகளை பல ஊடகவியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.


தனது பிள்ளை சுகவீனமுற்று இருந்ததால் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்ற தினத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதாக மரத்தில் கட்டப்பட்டிருந்த அதிகாரி கூறியுள்ளார்.


தான் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது அதிகாரிகளுக்கான முதலாவது எச்சரிக்கையெனவும் இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்தால் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் மேர்வின் சில்வா உரியாற்றும் போது, தாம் அந்த உத்தியோகத்தரை மரத்தில் கட்டவில்லை என்றும், மற்றவர்களுக்குப் பிழையான உதாரணமாகத் தான் இருக்கக்கூடாது என்பதற்காக அந்த அதிகாரியே தம்மைத்தாமே மரத்தில் கட்டியதாகவும் தெரிவித்தார்.


இதேவேளையில், அமைச்சருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்வரை நாடெங்கிலும் டெங்கு ஒழிப்பு திட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

மூலம்

[தொகு]