இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து மூன்று தொழிலாளர்கள் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 14, 2011

இலங்கையின் மலையகத்தில் பதுளை மாவட்டத்தில் தெமோதர பெருந்தோட்ட தேயிலை தொழிற்சாலையில் நேற்றுக் காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் இறந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.


தேயிலையை உலரச் செய்வதற்காக தோட்ட நிர்வாகம் அண்மையில் நாளொன்றுக்கு ஐயாயிரம் தேயிலை கொழுந்தை மிகவிரைவாக உலரச் செய்ய கூடிய கொதிகலன் ஒன்றை அமைத்திருந்தது. இந்த கொதிகலன் வெடிப்புண்டதிலேயே மேற்படி விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே மூவர் இறந்துள்ளனர். நெதல்ஹில் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பையா ராஜன் (42), பாலையா ஜீவபாக்கியம் (52), சிங்காரவேல் விஜயம் (30) ஆகியோரே கொல்லப்பட்டவர்கள். பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த வெடிப்பினால் தேயிலை தொழிற்சாலையின் மூன்றாம் மாடிக் கூரை சேதமடைந்திருப்பதாகவும், சம்பவ இடம் பெரும் குண்டு வெடிப்பு இடம்பெற்றதைப் போன்று காட்சியளிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எரிவாயுவினால் இயங்கும் இத்தகைய கொதிகலனை இயக்குவதற்கு தொழில் நுட்பவியலாளர்கள் தேவை. எனினும் இதனை நிர்வாகம் தொழில்நுட்பமே தெரியாத சாதாரண தொழிலாளர்களை கொண்டே இயக்கி வந்தது எனக் கூறப்படுகிறது.


மூலம்[தொகு]