உள்ளடக்கத்துக்குச் செல்

யப்பானியப் பிரதமர் யுகியோ அட்டொயாமா பதவி விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 2, 2010

அமெரிக்க இராணுவத் தளம் தொடர்பான சர்ச்சையை அடுத்து யப்பானியப் பிரதமர் யுகியோ அட்டொயாமா தாம் பதவி விலகுவதாக இன்று அறிவித்தார். எட்டு மாதங்களே இவர் ஆட்சியில் இருந்தார்.


2009 இல் யுகியோ அட்டொயாமா

தாம் பதவிக்கு வந்ததும் தெற்குத் தீவான ஒக்கினாவாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றுவதாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததனால் அவர் சர்ச்சைக்குள்ளானார்.


அட்டொயாமாவின் யப்பானிய மக்களாட்சிக் கட்சி அடுத்த யூலை மாதத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் பலத்த எதிர்ப்பை எதிர் நோக்கியிருப்பதாக தேர்தல் அவதானிகள் கருதுகின்றனர்.


சென்ற ஆண்டில் இவரது கட்சி பெரும் வெற்றியைப் பெற்று ஐம்பதாண்டுகளாக ஜப்பானை ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆதிக்கத்தை முறியடித்தது.


63 வயதான அட்டொயாமா கடந்த 4 ஆண்டுகளில் ஜப்பானில் பதவியில் இருந்த 4வது பிரதமராவார்.


அமெரிக்காவின் பியூட்டென்மா இராணுவத்தளம் ஒக்கினாவாவின் நிரந்தரமாகவே இருக்கும் என சென்ற வாரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அட்டொயாமா மீது அழுத்தம் அதிகரித்திருந்தது.


இவ் இராணுவத்தளத்தில் மொத்தம் 47,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.


1995 ஆம் ஆண்டு ஒக்கினாவாவில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி அமெரிக்க இராணுவத்தினன் ஒருவனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை, மற்றும் பல முறைகேடுகள் காரணமாக இத்தீவு வாசிகள் அமெரிக்கர்கள் மீது கோபமடைந்திருந்தனர்.


இரண்டாம் உலகப் போரின் பின்னர் யப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி, யப்பான் தனக்கென போர்ப்படை ஒன்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் யப்பானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்திருந்தது.

மூலம்