நைஜீரியாவில் கிறித்தவக் கோவில்கள் மீது தாக்குதல், 36 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 18, 2012

நைஜீரியாவின் வடக்கே கடூனா மாநிலத்தில் கிறித்தவக் கோயில்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள், மற்றும் மதக் கலவரங்களினால் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர். மாநிலம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கோயில்கள் மீதான தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர். இதனை அடுத்து முஸ்லிம்கள் மீதும், நிவாரணப் பணியாளர்கள் மீதும் நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் மேலும் 20 பேர் கொல்லப்பட்டனர். கடூனாவின் தெற்கே கிறித்தவ இளைஞர்கள் முஸ்லிம்களை அவர்களது வாகனங்களில் இருந்து கீழே இறக்கி உயிருடன் எரித்துப் படுகொலை செய்தனர் என செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் தெரிவித்தனர். பலரது உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரியூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கோயில்கள் மீதான தாக்குதல்களுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை எனினும், இது போன்று இம்மாநிலத்தில் முன்னர் நடந்த தாக்குதல்களை போக்கோ அராம் என்ற தீவிரவாத இசுலாமியக் குழுவே நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வாரமும் கிறித்தவக் கோவில்கள் இரண்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அண்மைக் காலங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் கிறித்தவக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நைஜீரியாவில் இசுலாமிய சரியா சட்டங்களைக் கொண்டுவரவிருப்பதாக பொக்கோ அராம் போராளிகள் கூறுகின்றனர்.


மூலம்[தொகு]