மாலியின் துவாரெக் போராளிகளின் இராணுவ நடவடிக்கை நிறுத்தம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 5, 2012

மேற்காப்பிரிக்க நாடான மாலியின் துவாரெக் போராளிகள் தமது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளதாக தமது இணையத்தளத்தில் அறிவித்துள்ளனர். தமது அரசை அமைக்கக்கூடிய அளவுக்கு போதுமான அளவு பகுதிகளைத் தாம் கைப்பற்றியிருப்பதாக அசவாத் தேசிய விடுதலை இயக்கம் என்ற அந்த போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது.


அசவாத் தேசிய விடுதலை இயக்கம் கோரும் மாலியின் அசவாத் பிராந்தியம்

ஆனாலும் வடக்கு மாலியில் துவாரெக்குகளுடன் இணைந்து போரிட்ட இசுலாமியத் தீவிரவாதிகளின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.


துவாரெக் போராளிகள் மீது அரசாங்கம் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து ஆட்சியைப் பிடித்துள்ள இராணுவத்தினரைப் பதவியில் ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான முன்னெடுப்புகளை விவாதிக்க மேற்காப்பிரிக்க நாடுகளின் இராணுவத் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை கூடவிருக்கிறார்கள். மாலிக்கு 2000 பேரடங்கிய இராணுவப் பிரிவை அனுப்புவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று புதன்கிழமை கூடிய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் மாலியில் அனைத்து வகை இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது. இதனை அடுத்தே துவாரெக் போராளிகள் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.


"அசவாத் பிராந்தியம் முழுமையாக விடுவிக்கப்பட்டதை அடுத்தும், வெளிநாட்டு சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வியாழக்கிழமை நள்ளிரவுடன் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அசவாத் தேசிய விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.


அல்-கைதாவுடன் தொடர்புடையது இசுலாமியத் தீவிரவாதக் குழுவான அன்சார் தைன் என்ற அமைப்பு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சரியா என்ற இசுலாமியத் தீவிரவாதக் கொள்கையை அமுல் படுத்தப் போராடி வருகிறது. இவ்வமைப்புக் குறித்தும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை எச்சாரிக்கை விடுத்திருக்கிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]