உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாயில் கியூரியோசிட்டி தரையுளவி வெற்றிகரமாகப் பயணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டெம்பர் 21, 2012

கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய்க் கோளில் தனது முக்கிய இலக்கை அடைவதற்கான முயற்சியில் பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளதாக நாசா அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆறு வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தரையிறங்கிய கியூரியோசிட்டி தற்போது மொத்தம் 289 மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. இந்தத் தரையுளவி தனது முக்கிய ஆய்வு இலக்கான கிளெனெல்க் என்ற பள்ளத்தாக்கை அடைய இன்னமும் 200 மீட்டர் தூரம் மட்டுமே பயணிக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் மூன்று வகை அடுக்கடுக்கான நில அமைப்புகள் உள்ளதாக நாசா தெரிவிக்கிறது.


இது செல்லும் பாதையில், 25 செமீ உயரமும், 40 செமீ அகலமும் கொண்ட இருண்ட கற்பாறை ஒன்றையும் அது ஆராயவுள்ளது. இப்பாறையில் எவ்வித அறிவியல் பெறுமதியும் இல்லை என நம்பப்படுகிறது. ஆனாலும், கியூரியோசிட்டி தானியங்கி தனது ஆய்வு உபகரணங்களில் மூன்றை ஒன்றன் பின் ஒன்றாக முதன்முதலாகச் சோதித்துப் பார்ப்பதற்கு இப்பாறையைப் பயன்படுத்தும்.


கெம்காம் லேசர் மூலம் தூரத்தில் இருந்து இப்பாறையைப் பிளந்து பின்னர் அதனை அண்மித்து தனது கரத்தில் பொருத்தப்பட்டுள்ள வில்லை, மற்றும் எக்சு-கதிர் நிறமாலைமானி மூலம் அப்பாறையில் ஆய்வுகளை நடத்தும்.


கடந்த புதன்கிழமை நாசா அறிவியலாளர்கள் கியூரியோசிட்டி தரையுளவியின் முன்னேற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். செவ்வாயின் நிலாக்களான போபோசு, டெய்மோசு ஆகியன சூரியனுக்கு முன் சென்ற போது தரையுளவி எடுத்த படங்களையும் அவர்கள் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.


மூலம்

[தொகு]