உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியாவில் இளைஞர்கள் பலர் இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 3, 2012

நைஜீரியாவின் மைதுகிரி மாகாணத்தில் 40 இற்கும் அதிகமான இளைஞர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என உள்ளூர்ச் செய்திகளை ஆதாரம் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


தான் வசிக்கும் வீதியில், தனது நான்கு மகன்கள் உட்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மலாம் அஜி முஸ்தபா என்ற இமாம் ஒருவர் செய்தியாளருக்குத் தெரிவித்தார். மைதுகிரியின் இராணுவப் பேச்சாளர் இது பற்றித் தமக்கு எதுவும் தெரியாதெனக் கூறியிருந்தார். ஆனாலும் தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


வியாழக்கிழமை அவரும் அவரது மகன்களையும் இராணுவத்தினர் கைது செய்து திறந்த வெளி ஒன்றுக்குக் கூட்டிச் சென்றனர் என்றும் அங்கே ஏற்கனவே மேலும் பலர் கூடியிருந்ததாகவும் தெரிவித்தார். அங்கு வைத்து பலர் அடையாளம் காணப்பட்டு வேறுபடுத்தப்பட்டதாகவும், தனக்கு முன்னாலேயே தனது பிள்ளைகளையும், மேலும் பலரையும் சுட்டுக் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார். "இறந்த உடல்களை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்." தனது மகன்களின் உடல்களைப் பொறுப்பெடுக்க மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கு 48 உடல்களைக் கண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இசுலாமியப் போராளிகள் மீது தாக்குதலைத் தொடங்கியிருக்கும் நைஜீரிய இராணுவத்தினர் சட்டவிரோதப் படுகொலைகளை நடத்தியுள்ளதாக அண்மையில் பன்னாட்டு மன்னிப்பகம் குற்றம் சாட்டியிருந்தது.


நைஜீரியா முழுவதும் இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தக்கோரிப் போராடும் போக்கோ ஹராம் போராளிகள் அமைப்பு மைதுகிரி பிராந்தியத்தில் பலமான நிலையில் உள்ளனர். கடந்த இரண்டாண்டுகளில் நைஜீரியாவின் வடக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் இக்குழுவினரின் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.


நேற்று வெள்ளிக்கிழமை அன்று இளைப்பாறிய இராணுவ ஜெனரல் முகமது சுவா என்பவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 1960களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பியாபிரான் தீவிரவாதிகளை அடக்கியவர். இவரது கொலைக்கு போக்கோ ஹராம் தீவிரவாதிகளே காரணம் என நம்பப்படுகிறது.


மூலம்

[தொகு]