உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரேலியாவின் நவூரு அகதிகள் முகாமின் நிலைமை 'சகிக்க முடியாதது', நவி பிள்ளை கருத்து

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 14, 2012

நவூரு தீவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆத்திரேலிய அகதிகள் முகாமின் நிலைமைகள் சகிக்க முடியாமல் இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையாளர் திருமதி நவி பிள்ளை குற்றம் சாட்டியுள்ளார்.


அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் சிலர் அண்மையில் நடத்தியதாகக் கூறப்படும் உண்ணாநிலைப் போராட்டமே இதற்கு சான்றாகும் என அவர் கூறினார். அங்குள்ள வாழ்க்கை நிலை, மற்றும் தடுத்து வைக்கப்படும் கால எல்லை போன்றவற்றுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆத்திரேலியா தனது தமது எல்லைக்கப்பால் வைத்து அகதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் திட்டத்தை ஆத்திரேலியா கடந்த செப்டம்பர் மாதத்தில் மீள அமுல்படுத்தியிருந்தது. இத்திட்டத்தின் படி, சட்டவிரோதமாக ஆத்திரேலியாவுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகள் தற்போது நவூருவில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இன்னும் சில வாரங்களில் பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவிற்கும் அனுப்பப்படுவர்.


ஆத்திரேலியாவின் ஏபிசி வானொலிக்கு நவி பிள்ளை அளித்த நேர்காணலில், "அடைக்கலம் கோருவோரின் உரிமைகளை ஆத்திரேலியா மதிக்க வேண்டும்," எனக் கூறினார். "மிக நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு இது ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டுக்கும் என நான் அஞ்சுகிறேன்," என்றார். "அடைக்கலம் கோருவோரைத் தடுத்து வைப்பது கடைசி வழிமுறையாகவே இருக்க வேண்டும், அது முதலாவதாக இருக்கக் கூடாது".


நவூருவில் 300 பேர் வரையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக அகதிகளுக்கான வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். பன்னாட்டு மன்னிப்பகத்தின் அதிகாரிகள் அடுத்த வாரம் நவூருவுக்கு வர இருக்கிறார்கள் என்ற செய்தியை அடுத்து பலர் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நவூருவில் தற்போது 370 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கை, மற்றும் ஆப்கானித்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களிலேயே தங்கியுள்ளனர்.


ஐரோப்பியக் குடியேறிகள் மற்றும் விமானம் மூலம் வரும் அகதிகள் நேரடியாக ஆத்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் கடல்வழி மூலம் வருபவர்கள் மட்டுமே தடுப்பு முகாம்களில் வைக்கப்படுகின்றனர். இது இரட்டை நியாயம் என நவி பிள்ளை ஆத்திரேலிய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார்.


மூலம்

[தொகு]