உள்ளடக்கத்துக்குச் செல்

பாலத்தீன நாடு ஐக்கிய நாடுகளின் பார்வையாளர் தகுதியைப் பெற்றது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 30, 2012

இசுரேல், மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐக்கிய நாடுகளின் பார்வையாளர் தகுதியை பாலத்தீனம் பொதுச் சபையின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் பலத்துடன் பெற்றுக் கொண்டது.


இசுரேலுடனான "இரு-நாட்டுத் தீர்வைப் பெறுவதற்கு இதுவே கடைசிச் சந்தர்ப்பமாகும்" என பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் தெரிவித்தார். ஆனால், அமைதிப் பேச்சுக்கல் இதன் மூலம் தள்ளிப் போடப்பட்டுள்ளது என ஐநாவுக்கான இசுரேல் தூதர் தெரிவித்தார்.


பாலத்தீனம் பார்வையாளர் தகுதியைப் பெற்றுக் கொண்டதை அடுத்து அந்நாடு ஐக்கிய நாடுகளின் விவாதங்களிலும், பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஐநா அமைப்புகளிலும் பங்கேற்க முடியும்.


பாலத்தீனத்துக்கு ஆதரவாக 138 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன. ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், செருமனி உட்பட 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. செக் குடியரசு, கனடா, மார்சல் தீவுகள், பனாமா போன்றவை எதிர்த்து வாக்களித்தன.


முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நூற்றுக் கணக்கான பாலத்தீனர்கள் மேற்குக் கரையின் ரமல்லா நகரின் வீதிகளில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


1967 ஆம் ஆண்டில் இசுரேலினால் கைப்பற்றப்பட்ட மேற்குக் கரை, காசா, கிழக்கு எருசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பாலத்தீன நாட்டுக்கு ஐக்கிய நாடுகளில் உறுப்புரிமையை பாலத்தீனியர்கள் கோரி வருகின்றனர்.


மூலம்

[தொகு]