உள்ளடக்கத்துக்குச் செல்

அமாசு இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 8, 2012

பாலத்தீன இசுலாமிய இயக்கமான அமாசு இயக்கத்தின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காசாக் கரையில் இன்று சனிக்கிழமை கூடினர். முதற்தடவையாக காசாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நாடுகடந்த நிலையில் வாழும் அமாசு இயக்கத்தின் அரசியல் தலைவர் காலித் மசால் இக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


கடந்த மாதம் அமாசு இயக்கத்திற்கும், இசுரேலுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை அடுத்து அமாசு இயக்கத் தலைவரின் பாலத்தீனப் பயணம் இடம்பெற்றுள்ளது. அமாசு இயக்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், பட்டா இயக்கத்துடனான போச்சுக்கள் குறித்தும் இவர் தனதுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


2007 ஆம் ஆண்டில் பாலத்தீனத் தேர்தல்களில் வெற்றி பெற்றதை அடுத்து அமாசு இயக்கம் பட்டா இயக்கத்தினரை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றியது. மேற்குக் கரையின் சில பகுதிகளை பட்டா இயக்கத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.


2011 ஆம் ஆண்டில் பட்டா இயக்கத்தின் தலைவரும், பாலத்தீன தேசிய அதிகார சபையின் தலைவருமான மகுமுது அப்பாசுக்கும் காலித் மசாலுக்கும் இடையில் தமக்கிடையேயான வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண எகிப்தில் வைத்து உடன்பாடு எட்டப்பட்டது. இது குறித்தும் மசால் இன்று அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


1997 ஆம் ஆண்டில் யோர்தானில் இசுரேலின் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து மசால் தப்பியிருந்தார்.


மூலம்

[தொகு]