உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத்தில் போர்க்குற்றங்களுக்காக இசுலாமிய மதகுரு ஒருவருக்கு மரணதண்டனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சனவரி 21, 2013

1971 விடுதலைப் போரின் பாது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபலமான இசுலாமிய மதகுரு ஒருவருக்கு வங்காளதேசத்தின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


சர்ச்சைக்குரிய பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்றம் மவுலானா அப்துல் கலாம் அசாதுக்கு தண்டனை வழங்கியுள்ளது. இந்நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட முதல் நபர் இவராகும். இவர் தற்போது பாக்கித்தானில் வாழ்ந்து வருவதால், குற்றவாளி இல்லாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டது.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசுலாமிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் இவர் போரின் போது ஆறு இந்துக்களை கொலை செய்தும், பல இந்துப் பெண்களை பாலியன் வன்புணர்வுக்கும் ஆளாக்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


மவுலானா அசாத், மற்றும் பலர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் பழிவாங்கல் என சில விமரிசகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 1971 ஆம் ஆண்டில் ஜமாத்-இ-இசுலாமி என்ற கட்சியின் மாணவர் அமைப்புத் தலைவராக அசாத் விளங்கியிருந்தார். அத்துடன், பாக்கித்தானிய இராணுவத்துக்கு உதவியாக அமைக்கப்பட்ட ரசக்கார் வாகினி என்ற துணை-இராணுவப்படையிலும் உறுப்பினராக இருந்தார். இந்த இராணுவப்படை இந்துக்கள் மீதும், வங்காளத் தேசியவாதிகளைன் ஆதரவாளர்களுக்கும் எதிராக பல தாக்குதல்களை நடத்தியிருந்தது.


வங்காளதேசன் தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர், மற்றும் ஜமாத் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலர் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.


ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது. கிழக்கு பாக்கித்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாக்கித்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாகிஸ்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். மில்லியன் கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


மூலம்

[தொகு]