வங்காளதேசத்தில் போர்க்குற்றங்களுக்காக இசுலாமியக் கட்சித் தலைவருக்கு ஆயுள் தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 5, 2013

1971 ஆம் ஆண்டில் பாக்கித்தானுடனான விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்கள் இழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வங்காளதேசத்தின் முக்கிய இசுலாமியக் கட்சியின் தலைவருக்கு அந்நாட்டின் வங்காளதேசத்தின் போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


ஜமாத்-இ-இசுலாமி என்ற தீவிர இசுலாமியக் கட்சியின் தலைவர் அப்துல் காதர் முல்லா ஆயுள்தண்டனை பெற்றார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். முல்லாவுக்கான தீர்ப்பு நாடெங்கும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. திங்கட்கிழமை அன்று ஆயிரக்கணக்கானோர் தலைநகர் டாக்காவில் கூடி தமது தலைவர்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே கைகலப்பும் இடம்பெற்றுள்ளன. தமது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டவே அரசு இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை நாடளாவிய வேலை நிறுத்தத்திற்கு ஜமாத் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


ஜமாத் இசுலாமியின் தலைவர்கள் சிலர், மற்றும் வங்காளதேச தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் உட்பட மொத்தம் 12 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


கடந்த மாதம் அபுல் கலாம் அசாத் என்ற முஸ்லிம் மதகுரு ஒருவருக்கு அவர் நாட்டில் இல்லாத நிலையில் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


ஆளும் அவாமி லீக் தலைமையிலான வங்க அரசு இந்த சிறப்பு நீதிமன்றத்தை 2010 மார்ச் மாதத்தில் அமைத்தது. கிழக்கு பாக்கித்தானாக இருந்து 1971ஆம் ஆண்டில் தனி நாடாக வங்கதேசம் பிரிந்து சென்றபோது நடத்தப்பட்ட விடுதலைப் போரின் போது பாக்கித்தானுடன் தொடர்பு வைத்திருந்த வங்காள தேசத்தவர்கள் மீது இந்தச் சிறப்பு நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்தது. இப்போரின் போது கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்கள் பெரிய அளவில் நடந்திருந்தன. அப்போதைய மேற்குப் பாகிஸ்தானின் இராணுவத்தினர் பெருமளவு வங்கதேசப் பொதுமக்களைக் கொன்று குவித்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோடிக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.


மூலம்[தொகு]