மட்டக்களப்பு கல்குடாவில் படையினர் சுட்டதில் பொதுமகன் கொல்லப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 6, 2009

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வள்ளமொன்றில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல பயணமொன்றிற்கு ஆயத்தமானவர்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.


இராணுவத்தினரைக் கண்டு நாலாபுறமும் தப்பியோடியவேளை துப்பாக்கிச் சூட்டிலும் நீரோடையொன்றில் வீழந்த வேளை முதலைக் கடிக்கும் உள்ளாகிய நிலையில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


50 பேர் இந்தப் பயணத்தை மேற்கொள்ள படகை எதிர்பார்த்துக் கொண்டு கடற்கரையில் காத்திருந்த வேளை இராணுவத்தினரைக் கண்டு தாங்கள் தப்பியோடியதாக சம்பவத்தில் முதலைக் கடிக்கு இலக்கான கோபாலப்பிள்ளை ஞானசேகரம் கூறுகின்றார்.


சுமார் மூன்றரை லட்சம் ரூபா வரை இதற்காக தான் செலவு செய்துள்ளதாகவும் இப்படியான பிரச்சினைகள் வரும் என்று தெரிந்திருந்தால் இந்த பயணத்தை தான் நாடியிருக்க மாட்டேன் என்றும் மீனவரான அவர் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்தார்.


தகவலொன்றின் பேரிலேயே அந்த இடத்திற்கு விரைந்ததாகக் கூறும் இராணுவத்தினர் அங்கு மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது தப்பிச் செல்ல முயன்ற இளைஞரொருவர் தமது துப்பாக்கியை பறித்து சுட முற்பட்டதாகவும் இதனையடுத்து பதில் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும் கூறுகின்றனர்.


வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் கல்லடி திருசெந்தூரைச் சேர்ந்த 22 வயதான கிறிஸ்டியன் ரொபின்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மூலம்[தொகு]