ஊகோ சாவேசுவின் வாழ்க்கை படமாகிறது, அமெரிக்கர் ஆலிவர் ஸ்டோன் இயக்குகிறார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 25, 2013

வெனிசுவேலாப் புரட்சியாளர் மறைந்த ஊகோ சாவேசின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க இயக்குனரும், அவரது தீவிர ரசிகருமான ஆலிவர் ஸ்டோன் இயக்கி வருகிறார்.


அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் புரட்சியாளர் ஊகோ சாவேசு. 1954ம் ஆண்டு பிறந்த இவர் இராணுவக் கல்லூரியில் படிப்பை முடித்தபின் ராணுவத்தின் தகவல் தொடர்பு அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1997ம் ஆண்டு முதல் ஐந்தாவது குடியரசு இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்த இவர், பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து 2007ம் ஆண்டு வெனிசுலா ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியைத் துவங்கி 2013ம் ஆண்டு வரை அதன் தலைவராக இருந்தார்.


1999ம் ஆண்டு முதன்முறையாக வெனிசுவேலா அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவேசு தொடர்ந்து மூன்று முறை அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வெனிசுவேலாவின் நெருங்கிய நட்பு நாடான கியூபாவில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, கடந்த மார்ச் 5ம் தேதி உயிரிழந்தார்.


14 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து நாட்டில் பொதுவுடைமை நிலவவும், சோசலிசம் உருவாக்கவும் பாடுபட்டவர் சாவேசு. இவரது தீவிரமான ரசிகர் அமெரிக்காவின் திரைப்பட இயக்குனரான ஆலிவர் ஸ்டோன். இவர் ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு சாவேசு, பொலிவியா அரசுத்தலைவர் ஈவோ மொரேல்ஸ், எக்குவடோர் தலைவர் ரஃபேல் கொரியா ஆகியோரை மையமாக வைத்து தென் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் குறித்து “சவுத் ஆப் தி பார்டர்” என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில், தற்போது சாவேசின் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றை அவர் இயக்கி வருவதாக வெனிசுவேலா அரசுத்தலைவர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 10 பகுதிகள் உள்ளன. இந்தப்படம் அடுத்த மாதம் முடிவடைந்து விடும் என்றும், விரைவில் திரைக்கு வரும் எனப் படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், சாவேசின் வாழ்க்கை குறித்த “அமெரிக்காவின் ஏகாதிபத்தியம்” திரைப்படத்தை பெரிய திரையில் காண நாங்கள் ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இப்படத்திற்கான சிறப்புக் காட்சிகள் வெனிசுவேலாவில் திரையிடப்படவுள்ளதாகவும், இதில் இப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆலிவர் ஸ்டோன்ஸ், வியட்நாம் போர் தொடர்பாக ‘ப்ளடூன்’ என்ற படத்தை முதன்முறையாக வெளியிட்டார். அதன்பின்னர், ஜேஎஃப்கே, நேச்சுரல் பார்ன் கில்லர் மற்றும் நிக்சான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் குறித்து “டபிள்யூ” என்ற பெயரிலும், “வால் ஸ்ட்ரீட்ஸ்” படமும் பிரபலமானவை.


மூலம்[தொகு]