ஒருபால் திருமண மறுப்புச் சட்டத்துக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
வியாழன், சூன் 27, 2013
ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் நடுவண் அரசின் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தின் (Defense of Marriage Act) மூன்றாம் பகுதி அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது திருத்ததிற்கு எதிரானது எனத் தீர்ப்பளித்துள்ளது. ஒருபாலின துணைவர்களுக்கு ஓய்வூதியம், சொத்துரிமை உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுவண் அரசின் சேவைகளை மறுத்த திருமணப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி இத் தீர்ப்பை அடுத்து செல்லுபடியாகாது.
இச் சட்டத்துக்கு எதிரான வழக்கை எடித் வின்சர் கொண்டு வந்தார். எடித் வின்சர் தனது நாற்பது ஆண்டு கால ஒருபால் துணைவரை 2009 இல் இழந்தார். இவர்களது திருமணம் நியூயோர்க் மாநிலத்தில் சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தினால் நடுவண் அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் துணையை இழந்தவர்களுக்கு கிடைக்கும் பல உரிமைகள் இவருக்கு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து இவர் வழக்குத் தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றம் வரை வந்த இந்த வழக்கில் இவருக்குச் சார்பாக அச்சட்டத்தை எதிர்த்து ஐந்து நீதிபதிகளும் இவருக்கு எதிராக நான்கு பேரும் தீர்ப்பு வழங்கினார்கள். சார்பாக தீர்ப்பு வழங்கியவர்கள் இச் சட்டம் ஒருபால் துணைவர்களுக்கு எதிராக நியாயமின்றிப் பாகுபாடு காட்டுகின்றது என்றும், இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்றும் கூறினர். இத் தீர்வின் சிறுபான்மைக் கருத்தை வெளியிட்ட நீதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கிய இச் சட்டத்தை செல்லுபடியற்றதாக ஆக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.
இச் சட்டம் 1996 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் சட்ட ஏற்புப் பெற்றது. ஆனால் 2012 இல் ஒபாமாவின் அரசு இச் சட்டதுக்கு ஆதரவளிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருபாலின ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளார்கள். குடியரசுக் கட்சியர், பழமைவாதக் கொள்கையினர், சமய அடிப்படைவாதிகள் எதிர்த்துள்ளார்கள்.
மூலம்
[தொகு]- Gay marriage gets big boost in two Supreme Court rulings, ராய்ட்டர்ஸ், சூன் 27, 2013
- Supporters hail same-sex marriage court victory, சிபிசி, சூன் 26, 2013