உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியா பள்ளிவாசல் தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 13, 2013

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.


கொண்டுங்கா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இசுலாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ அராம் போராளிகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.


நுகோம் என்ற கிராமத்தில் இடம்பெற்ற வேறொரு தாக்குதலில் 12 பேர் கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் நால்வர் மக்கள் விழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. போர்னோ மற்றும் அயலில் உள்ள இரண்டு மாநிலங்களில் கடந்த மே மாதத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து இவ்வாறான பல விழிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


விழிப்புக் குழுவினரைத் தேடியே பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.


பொதுவாக இசுலாமியத் தீவிரவாதிகள் கிறித்தவ ஆலயங்களிலேயே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். ஆனாலும், தமது கருத்துக்களுடன் ஒத்துப் போகாத இசுலாமியர்கள் மீதும் அவர்கள் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள்.


போக்கோ அராம் போராளிகள் நாட்டின் வடக்கே இசுலாமிய நாடு ஒன்றை அமைக்கும் எண்ணத்தில் ஆயுதம் தாங்கிப் போரிட்டு வருகின்றனர்.


மூலம்

[தொகு]