இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு
- இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐநா மனித உரிமைகள் பேரவை ஆதரவு
- பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- இலங்கை எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு
- சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கு நாடுகள் தயாராகின்றன
- ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம்
சனி, ஆகத்து 31, 2013
இலங்கை எதேச்சதிகார ஆட்சியை நோக்கிச் செல்லுவதைக் காணக்கூடியதாக உள்ளது என ஏழு நாள் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தனது பயணத்தின் இறுதி நாளான இன்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார். பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது என அவர் கவலை தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்தத் தவறினால் பன்னாட்டு விசாரணை ஒன்று நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு பற்றிய மேலதிக தகவல்களை அரசாங்கத்திடம் கேட்டறிந்தேன். கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட இது போன்ற ஆணைக்குழுக்களை விட புதிய ஆணைக்குழு மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளேன். கடந்த ஆண்டுகளில் கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் பற்றிய பல முறைப்பாடுகள் கிடைத்தன. அவை தொடர்பான விடயத்தில் இருந்தும் தவறி விட மாட்டோம் என்றார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றார்.
போரின் போது பிடிபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தினார்.
இலங்கையில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர், ஏனைய சார்க் நாடுகளில் உள்ளது போன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தான் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பயணத்தின்போது, தன்னிடம் பேசிய சில மனித உரிமை ஆர்வலர்கள் பிற்பாடு காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் தொல்லைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக குற்றச்சாட்டுகள் வந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
"என்னை இங்கே வரவழைத்துவிட்டு, இப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்யக்கூடாது. இலங்கையில் ஆட்கள் கண்காணிக்கப்படுவதென்பதும் துன்புறுத்தப்படுவதென்பதும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இங்கே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அவர்களது குரல்களை ஒரேயடியாக ஒடுக்கிவிடும் விதமான காரியங்களும் நடக்கின்றன."
மேலும் தனது இந்தியத் தமிழ்ப் பாரம்பரியத்தை வைத்து தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவியென இலங்கையிலுள்ள அமைச்சர்கள், ஊடகங்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் கொள்கைப்பரப்பாளர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் இருந்து எந்த கௌரவத்தையும் எதிர்பார்க்க முடியாது என நவநீதம் பிள்ளை கூறினார்.
போரின் முடிவு ஒரு புதிய துடிப்பான சகலரையும் அணைத்துப்போகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும் இலங்கையில் எதேச்சதிகார வழியில் செல்வதற்கான அடையாளங்களைக் காணமுடிகின்றது' என அவர் கூறினார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை யாழ்ப்பாணம் பயணம், ஆகத்து 28, 2013
மூலம்
[தொகு]- UN's Navi Pillay attacks Sri Lanka human rights record, பிபிசி, ஆகத்து 31, 2013
- Signs of Sri Lanka moving towards authoritarianism-Pillay, டெய்லிமிரர், ஆகத்து 31, 2013
- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!- நவநீதம்பிள்ளை, தமிழ்வின். ஆகத்து 31, 2013
- போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம்?: ஊடகவியலாளர் சந்திப்பில் நவி.பிள்ளை, தமிழ்வின், ஆகத்து 31, 20-13