உள்ளடக்கத்துக்குச் செல்

கியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 3, 2013

கியூபாவில் இருந்து அமெரிக்கா வரை சுறாமீன்களுக்கு எதிரான காப்பு வலை எதுவும் இன்றி நீந்திக் கடந்து சாதமை புரிந்தார் டயானா நியாத் என்ற அமெரிக்கப் பெண்.


சனிக்கிழமை காலையில் கியூபா தலைநகர் அவானாவில் இருந்து புறப்பட்டு 177 கிமீ தூரத்தை 53 மணித்தியாலங்களில் நீந்திக் கடந்து திங்கட்கிழமை உள்ளூர் நேரம் பிற்பகல் 2:00 மணிக்கு புளோரிடாக் கரையை அடைந்தார் 64 வயதான டயானா. இவருக்கு உதவியாக 35 பேரடங்கிய குழு ஒன்று படகுகளில் அவருடன் கூடச் சென்றது.


1978-ம் ஆண்டு முதல் 4 முறை இம்முயற்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்தார் டயானா. 1978 ஒரு முறையும், 2011 இல் இரண்டு முறையும், 2012 இல் ஒரு முறையும் தோல்வியடைந்தார். ஆனாலும், தனது வயதைக் கருத்தில் கொள்ளாமல் முயற்சியைக் கைவிடாமல் 5-வது முறையாக நீந்தி வெற்றி பெற்றுள்ளார்.


கடலில் நீந்துகிறபோது ஜெலி மீன்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முகத்தில் சிலிக்கான் முகமூடியை இவர் அணிந்து கொண்டார். அத்துடன் சுறாமீன்களில் இருந்து தப்புவதற்காக இவரைச் சுற்றி மெலிதான மின்புலம் ஒன்றைப் பரப்பும் கருவி ஒன்றை இவரது குழுவினர் தம்முடன் எடுத்துச் சென்றனர். இவர் எந்த நேரத்திலும் இவருக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற படகைத் தொட முடியாது என்பது நீச்சல் விதிமுறையாகும். ஆனாலும், நீச்சல்காரருக்குத் தேவையான உணவு, நீர் போன்றவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.


1997 ஆம் ஆண்டில் ஆத்திரேலியரான சூசி மரோனி என்பவர் சுறாமீன் பாதுகாப்பு வலையின் உதவியுடன் வெற்றிகரமாக நீந்திக் கடந்திருந்தார்.


மூலம்

[தொகு]