தில்லி கும்பல்-வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
சனி, செப்டெம்பர் 14, 2013
புதுதில்லி மருத்துவக்கல்லூரி மாணவி வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் அதிகபட்சத் தண்டனையாக மரணதண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
முக்கேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குப்தா ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியிருந்தது. தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர்.
தில்லியில் 2012 டிசம்பர் 16-ஆம் திகதி இரவு 23 வயது மருத்துவக்கல்லூரி மாணவியொருவர், ஓடும் பேருந்து ஒன்றில் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். படுகாயமடைந்த அம்மாணவி, சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு இரு வாரங்களின் பின்னர் சிகிச்சைகள் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
குற்றவாளிகள் ஆறுபேரையும் உடனே தூக்கிலிட வேண்டும் என்று பல இடங்களில் பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இக்குற்றச்செயலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறுவன் என்பதால், அவனுக்கு டில்லி சிறுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அண்மையில் வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. ராம்சிங் என்ற ஆறாமவர் சிறையிலேயே சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
குற்றவாளிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஏ. பி. சிங் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தத் தீர்ப்பு அரசின் தலையீட்டின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளது. மரணத்தண்டனை விதிப்பதால் வன்புணர்வைக் கட்டுப்படுத்த முடியாது" என்றார்.
இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தை அணுகவும், ஜனாதிபதிக்கு மேன்முறையீடு செய்யவும் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் பாலியல் வன்புணர்வு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
மூலம்
[தொகு]- Delhi gang rape: Four sentenced to death, பிபிசி, செப்டம்பர் 13, 2013
- New Delhi bus gang rapists sentenced to death in case that sparked mass protests, ஏபிசி, செப்டம்பர் 13, 2013