உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி கும்பல்-வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 14, 2013

புதுதில்லி மருத்­து­வக்­கல்­லூரி மாணவி வன்­பு­ணர்வு மற்றும் படுகொலை வழக்கில் குற்­ற­வா­ளிகள் நால்­வ­ருக்கும் அதி­க­பட்­ச­த் தண்டனையாக மரணதண்டனை விதித்து நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது.


முக்கேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குப்தா ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியிருந்தது. தாம் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று குற்றவாளிகள் வாதிட்டனர்.


தில்­லியில் 2012 டிசம்பர் 16-ஆம் திகதி இரவு 23 வயது மருத்­து­வக்­கல்­லூரி மாண­வி­யொ­ருவர், ஓடும் பேருந்து ஒன்றில் வைத்து ஆறு பேர் கொண்ட கும்பலால் வன்­பு­ண­ர்வுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார். படு­கா­ய­ம­டைந்த அம்­மாணவி, சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு இரு வாரங்களின் பின்னர் சிகிச்­சைகள் பல­ன­ளிக்­காமல் உயி­ரி­ழந்தார்.


குற்­ற­வா­ளிகள் ஆறுபேரையும் உடனே தூக்­கி­லிட வேண்டும் என்று பல இடங்­களில் பொதுமக்களும் பல்­வேறு அமைப்புகளும் தொடர்ச்­சி­யான ஆர்ப்­பாட்­டங்­க­ளில் ஈடுபட்டு வந்தனர். இக்குற்றச்செயலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறுவன் என்­பதால், அவனுக்கு டில்லி சிறுவர் நீதி­மன்றம் 3 ஆண்­டுகள் சிறைத்தண்டனை அண்மையில் வழங்கித் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. ராம்சிங் என்ற ஆறாமவர் சிறை­யி­லேயே சுருக்­கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


குற்­ற­வா­ளிகள் சார்­பாக வாதாடிய வழக்­க­றிஞர் ஏ. பி. சிங் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தத் தீர்ப்பு அரசின் தலை­யீட்டின் பேரிலேயே வழங்­கப்­பட்­டுள்­ளது. மர­ணத்­தண்­டனை விதிப்­பதால் வன்­பு­ணர்வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது" என்றார்.


இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தை அணுகவும், ஜனாதிபதிக்கு மேன்முறையீடு செய்யவும் குற்றவாளிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்­தி­யாவில் பாலியல் வன்­பு­ணர்வு வழக்கில் தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது இதுவே முதன்­முறையாகும்.


மூலம்[தொகு]