விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பு வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டுள்ளது: மலேசியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 15, 2014

கடந்த சனிக்கிழமை அதிகாலையில் வான்பரப்பில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்சு 370 விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. இந்த விமானம் சில மணி நேரம் வானில் பறந்திருக்கலாம் என வெளியானத் தகவலையும் தற்போது மலேசியா ஒத்துக்கொண்டுள்ளது.


வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பரப்பிற்கு உட்பட்ட பகுதியில் விமானம் பறந்திருக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. விமானத்திலிருந்த எரிபொருளின் அளவினைக்கொண்டு இவ்விதம் கணித்துள்ளனர்.

கோலாம்பூரில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் பேசினார். அப்போது அவர், "விமானத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பானது யாராலோ வேண்டுமென்றே செயலிழக்கப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார். செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார்கள் தந்துள்ள ஆதாரங்களின்படி, இவ்விமானம் தனது பாதையினை மாற்றியிருப்பதோடு ஏறத்தாழ ஏழு மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். விமானத்திலிருந்த ஒருவரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளாக தெரியவருகிறது எனவும் நஜிப் ரசாக் தெரிவித்தார்.



மூலம்[தொகு]