இலங்கையின் தெற்கே முஸ்லிம், பௌத்தர்களுக்கிடையே நடந்த கலவரங்களில் மூவர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 16, 2014

இலங்கையின் தெற்கே களுத்துறை மாவட்டத்தின் அளுத்கமை நகரில் சிங்களப் பௌத்தக் கும்பல்களுக்கும், உள்ளூர் முஸ்லிம்களுக்கும் இடையில் நடந்த மோதல்களில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர்.


பொசன் பூரணை நாளன்று குருந்துவத்தை சிறீ விஜயராம கோயிலின் பிரதம குருவும் அவரது வாகன ஓட்டியும் தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி தீவிரவாதப் பௌத்த அமைப்பான பொது பல சேனா நேற்று அளுத்கமையில் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியது. இதனை அடுத்து இரு இனத்தவரிடையே நேற்று மோதல்கள் வெடித்தன.


முஸ்லிம்களின் கடைகள், மற்றும் பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டன. ஊர்வலத்தில் சென்ற பௌத்தர்கள்மீது கல் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தினர். இதனை அடுத்து அப்பிரதேசத்தில் காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளுர் செய்தியாளர்களும் இதில் தாக்கப்பட்டுள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிடுவதில் தணிக்கை உத்தரவு வந்துள்ளதாக உள்ளூர் செய்தித்தளங்கள் தெரிவித்துள்ளன.


அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. சட்ட ஒழுங்கை பேணி பொதுமக்களின் உயிர்களையும், வழிபாட்டுத் தலங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]