உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 18, 2016

சப்பானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.


சப்பானின் தென்மேற்கு தீவான கையுசுவில் வியாழனன்று இரவு 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் நேற்று மீண்டும் அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் ஆகியவை இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் 34 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாமென கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறி வருகின்றனர்.


நிலநடுக்கம் குறித்து நிருபர் களுக்கு பேட்டியளித்த சப்பான் உயரதிகாரி டோமோயூகி டனாக்கா, ‘‘கையூசுவின் குமாமோட்டோ பகுதியை மையமாக கொண்டு நள்ளிரவு 1.25 மணிக்கு 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் எத்தனை பேர் பலியாகி யுள்ளனர் என்பதை உறுதிபட கூறமுடியவில்லை. மேலும் அதிகாலை வேளையில் மீண்டும் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.


மின்கம்பங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை யும் அடியோடு சேதமடைந்துள்ளன. சுமார் 2 லட்சம் வீடுகள் மின் சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியிருப்பதாகவும், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் சப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்காக குமாமோட்டோவுக்கு 1,600 வீரர்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். 7.3 ரிக்டர் அளவில் நிகழ்ந்துள்ள இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என சப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் கவலை தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த நிலநடுக்கத்தால் கையூசுவில் உள்ள செண்டை அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


குமாமோட்டோவின் மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் நிலச்சரிவு காரணமாக பிற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் குமாமோட்டோவில் உள்ள எரிமலையும் தற்போது குமுறி வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் அடுத்தடுத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.


முக்கிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குமாமோட்டோ கோட்டை ஆகியவையும் நில நடுக்கத்தால் கடுமையாக சேத மடைந்துள்ளன. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளது. குமாமோட்டோவில் உள்ள ஒரு அணையும் நிலநடுக்கத்தால் இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத் துக்கு வெளியேற்றப்பட்டனர்.


மூலம்

[தொகு]