பிலிப்பைன்சில் தொடக்கப் பள்ளியொன்றின் மீது விமானம் வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 11, 2011

பிலிப்பைன்சு தலைநகர் மணிலா அருகே உள்ள பாரனேக் என்ற இடத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது சிறியரக விமானமொன்று மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


நேற்று சனிக்கிழமை இவ்விபத்து நடந்தது. மணிலா விமான நிலையத்திலிருந்து விமானம் பறக்க ஆரம்பித்தவுடன், உடனடியாகத் தரையிறங்க வேண்டுமென விமான ஓட்டியிடம் இருந்து தகவல் வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக விமான நிலையத்தில் தரையிறக்க மேற்கொண்ட முயற்சியை அடுத்தே விமானம் பள்ளியின் மீது வீழ்ந்துள்ளது. ஆறு முதல் எட்டு பேர் செல்லக்கூடிய சிறிய விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட இதுவரை 13 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாக ரெட் கிராஸ் செயலர் ஜீவென் பாங் தெரிவித்தார். விபத்து நடக்கும்போது பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீயானது அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. கிட்டத்தட்ட 30 குடிசை வீடுகள் எரிந்துள்ளதாக பிலிப்பீனிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என உடனடியாகத் தெரியவில்லை. விமானத்தின் விமானி மற்றும் உதவியாளர் ஆகியோரைக் காணவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


மூலம்[தொகு]