உள்ளடக்கத்துக்குச் செல்

வட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 12, 2010

ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் இராணுவத் தளம் ஒன்றின் முன்னால் இன்று கார்க் குண்டு ஒன்று வெடித்தது. முன்னாள் போராளி அமைப்பான ஐரியக் குடியரசு இராணுவத்தில் இருந்து வெளியேறிய ”உண்மையான ஐஆர்ஏ” (Real IRA) தாமே இத்தாக்குதலை நடத்தியிருந்ததாக உரிமை கோரியிருக்கிறது.


அயர்லாந்து தீவில் வட அயர்லாந்து

போராளிக் குழுவினர் வாடகை வாகனம் ஒன்றை தலைநகர் பெல்பாஸ்ட் இலிருந்து கடத்திருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவ்வாகனத்தில் குண்டு ஒன்று பொருத்தப்பட்டு ஹொலிவுட் என்ற இடத்தில் உள்ள இராணுவத் தளத்தின் பின்னே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 0020 மணிக்கு இடம்பெற்றது.


சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதித்துறை, மற்றும் காவல்துறை அதிகாரஙக்ள் நடுவண் அரசிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்பட்டு சில நிமிடங்களின் பின்னரே இத்தாக்குதல் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


உயிரிழப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், உள்ளூர்ப் பொதுமகன் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.


தாக்குதல் குறித்து எவ்வித எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தோர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Sources

[தொகு]