கொங்கோ முன்னாள் இராணுவத் தளபதி லுபாங்காவிற்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 10, 2012

2002 - 2003 காலப்பகுதியில் கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் முன்னாள் போர்த்தளபதி தொமசு லுபாங்கா சிறுவர்களைத் தமது கிளர்ச்சிப் படையில் சேர்த்த குற்றங்களுக்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.


கடந்த மார்ச் மாதத்தில் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் இவரைக் குற்றவாளியாகக் கண்டது. ஏற்கனவே இவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதால் இவர் மேலும் 8 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் வட-கிழக்கே இத்தூரி என்ற மாவட்டத்தில் இடம்பெற்ற இனவன்முறைகளில் குறைந்தது 60,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


லுபாங்கா கொங்கோ நாட்டுப்பற்றாளர் ஒன்றியம் என்ற ஹேமா இனப் போராளிகள் அமைப்புக்குத் தலைமை வகித்தவர். இத்தூரி பிரதேசத்தில் 1999 ஆம் ஆண்டில் இது போரில் ஈடுபட்டது.


லுபாங்காவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்பநிலையுடன் தொடபுபட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கிளர்ச்சியாளர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நாட்டின் கிழக்கே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ருத்சூரு என்ற நகரைக் கைப்பற்றினர். முன்னாள் இராணுவத் தளபதி பொஸ்கோ தகாண்டா என்பவர் தலைமையில் இப்படையினர் தற்போது நாட்டின் முக்கிய நகரான கோமா நோக்கி முன்னேறி வருகின்றனர். பொஸ்கோ தகாண்டாவும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வருகிறார்.


மூலம்[தொகு]