உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னாள் ஐநா செயலர் டாக் ஹமாசெல்ட் விமான விபத்தில் இறந்தது குறித்து புதிய விசாரணைகள்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 19, 2012

1961 ஆம் ஆண்டில் சாம்பியாவில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் டாக் ஹமாஷெல்ட் விமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டமைக்கான உண்மைக் காரணங்களைக் கண்டறியும் பொருட்டு புதிய விசாரணைகளை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


படிமம்:Dag Hammarskjold-2.jpg
டாக் ஹமாஷெல்ட் (1905-1961)

சுவீடனில் பிறந்த டாக் ஹமாஷெல்ட் மர்மமான முறையில் இறந்தது குறித்து 1962 ஆம் ஆண்டில் ஐநா நடத்திய விசாரணைகளில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இப்போது பன்னாட்டு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கொண்ட குழு ஒன்று புதிய தடயங்களைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கவிருக்கிறது.


அமைதித் திட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அப்போது ஐநா செயலாளராகப் பணியாற்றிய ஹமாஹெல்டும் அவரது குழுவினரும் கொங்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணம் செய்த விமானம் வடக்கு ரொடீசியாவின் உண்டோலா நகரில் (தற்போது சாம்பியாவில்) விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் விமானச் சிப்பந்திகளும், ஒரு பயணியும் மட்டுமே உயிர் பிழைத்தனர். இவ்விபத்து 1961 செப்டம்பர் 18 இல் இடம்பெற்றது.


இது குறித்து விசாரிக்க சரியான தருணம் வந்துள்ளதாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் குழுவின் தலைவர் டேவிட் லீ கூறியுள்ளார். இவ்விசாரணையின் முடிவுகள் ஓர் ஆண்டிற்குள் ஐநாவிடம் சமர்ப்பிக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூயெசு கால்வாய் தொடர்பான போரை அடுத்து ஐக்கிய நாடுகளின் முதலாவது அமைதிப்படையை இவரே உருவாக்கினார். அமைதிக்கான நோபல் பரிசு இறந்த பின்னர் இவருக்கு வழங்கப்பட்டது.


மூலம்

[தொகு]