உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 11, 2010


இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி நா. பத்மநாதன் நேற்று புதன்கிழமை தனது பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளதாக பிபிசி தமிழோசை அறிவித்தது. இவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்றைய தினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.


பல்கலைக்கழக மாணவர்களின் அழுத்தங்களைத் தொடர்ந்தே தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தமிழோசைக்குத் தெரிவித்துள்ள க்லாநிதி பத்மநாதன் இயற்பியல்துறை விரிவுரையாளராகத் தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட 50 பேர் நேற்று பல்கலைக்கழகத்தில் வைத்து உபவேந்தர் பதவி விலக வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். முன்னர் சிங்கள மாணவர் ஒருவரின் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு மாணவர்களை விடுதலை செய்யவேண்டும் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தம்மை பதவிவிலகுமாறு கோரியதாக பத்மநாதன் பிபிசி தமிழோசை நிருபருக்குத் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உபவேந்தரை அவர்கள் குற்றம்சாட்டினர்.


இதுகுறித்து தாம் ஏற்கனவே மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக தாம் அவர்களிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் தொடர்ந்து பதவிவிலகலை வற்புறுத்தியதாக அவர் தெரிவித்தார். தாம் உடனடியாகவே பதவிவிலகுவதாக அவர் மாநியங்கள் ஆணைக்குழுவிற்குத் தொலைபேசி மூலம் அறிவித்தார். அரசுத்தலைவர் அவரது பதவிவிலகலை ஏற்றுக் கொள்ளும் வரையில் அவரைத் தொடர்ந்து உபவேந்தர் பதவியில் இருக்குமாறு மாநியங்கள் ஆணைக்குழு அவரிடம் கோரியிருந்து, அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமல் உடனடியாகவே பதவிவிலகுவதாக அவர் தெரிவித்தார்.


இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தில், அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையின் ஒரு கட்டமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


மொஸ்கோவின் ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்தில் 1985 ஆம் ஆண்டில் இயற்பியலில் முதுமாணிப் பட்டம் பெற்ற பத்மநாதன், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளரானார். பின்னர் இங்கிலாந்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று, தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இயற்பியல் துறைத் தலைவர், மற்றும் அறிவியல் பீடத் தலைவர் போன்ற பதவிகளிலும் பணியாற்றினார்.


2006ம் ஆண்டு பதில் துணைவேந்தராக இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட கலாநிதி பத்மநாதன் 2008 யூலை மாதத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே இவரது பதவிக்காலம் முடிவடைய இருந்தது.


இதற்கிடையில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை இன்றுடன் கலைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் கலாநிதி பத்மநாதன் பதவி விலக வேண்டும் என குறிப்பிட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகளால் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என அநேகமான மாணவர்கள் இன்று எழுத்து மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளதை அடுத்தே மாணவர் பேரவையைக் கலைக்கத் தீர்மானித்ததாகப் பதில் துணை வேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

மூலம்