அண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர்
- 8 சனவரி 2014: அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது
- 3 சனவரி 2014: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்
- 29 திசம்பர் 2013: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது
- 18 ஏப்பிரல் 2013: அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்
- 17 செப்டெம்பர் 2012: அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்
செவ்வாய், பெப்பிரவரி 7, 2012
14 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அண்டார்க்டிக்காவின் பனியாற்றுக்குக் கீழே உள்ள வஸ்தோக் ஏரியை உருசிய அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைத்து அடைந்திருப்பதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் அறிவித்திருக்கிறார். அங்கு அறிவியலுக்குப் புதிய உயிரினங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த பல நாட்களாக வஸ்தோக் ஏரியை அடைவதற்காக உருசியர் அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் 3,768 மீட்டர்கள் ஆழத்தை அடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
சென் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் ஆய்வு நிறுவனஹைச் சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1.75 மீட்டர்கள் ஆழம் வீதத்தில் அவர்கள் பனியாற்றைத் தோண்டுகிறார்கள். வஸ்தோக் ஏரி உள்ள பகுதியில் வெப்பநிலை -40சி இற்குக் கீழே குறைய ஆரம்பித்திருப்பதால் மிக விரைவில் அவர்கள் தமது பணியை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். வஸ்தோக் ஏரியை உருசியர்கள் இப்போது அடைந்தாலும், 2012 இறுதியிலேயே ஏரியில் இருந்து அவர்கள் நீர் மாதிரிகளை மேலே எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
ஒண்டாரியோ ஏரியின் அளவை ஒத்தது இந்த வஸ்தோக் ஏரி. இது கிழக்கு அண்டார்க்டிக்காவின் பனியாற்றில் கிட்டத்தட்ட 4 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 14 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், பல்வேறு பனியாற்றடிகள் மூலம் நீர் அங்கு சென்றிருக்கலாம் என்பதால், அங்குள்ள நீர் சில ஆயிரம் ஆண்டுகள் வயதுடையதாகவே இருக்கும் என நம்பப்டுகிறது. குளிரைத் தாங்கக்கூடிய சில உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் கூறப்படுகிறது.
இவ்வாண்டு இறுதியில், பிரித்தானிய ஆய்வாளர்கள் அண்டார்க்டிக்காவில் எல்ஸ்வர்த் ஏரியை அடைய பனியாற்றைத் தோண்டத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Russian Scientists Drill to Sub-Glacial Antarctic Lake, ரியா நோவஸ்தி, பெப்ரவரி 6, 2012
- Russians drill into previously untouched Lake Vostok below Antarctic glacier, வாசிங்டன் போஸ்ட், பெப்ரவரி 7, 2012
- Race to drill into Antarctic lake, பிபிசி, பெப்ரவரி 6, 2012