அனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, மூவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 25, 2011

இலங்கையில் வட-மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று திங்கட்கிழமை மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குமிடையே இடம்பெற்ற கடும் மோதல் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டதுடன் எட்டு சிறைக்காவலர்கள் உட்பட 25 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக அநுராதபுரம் வைத்தியசாலை பணிப்பாளர் டபிள்யூ. எம். ரி. பி. விஜேகோன் தெரிவித்தார்.


அநுராதபுரம் மாவட்டம்

இந்த மோதல்களின் போது சிறைச்சாலையில் பல பகுதிகள் தீவைக்கப்பட்டதில் நூலகம், சமையலறை உட்பட பல கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சிறைச்சாலையில் உள்ள வசதியினங்கள் குறித்து கைதிகள் நீண்டகாலமாக முறையிட்ட வந்துள்ளனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமையால் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். 50 வரையான கைதிகள் சிறைச்சாலையின் கூரைகளின் மீது ஏறி நின்று எதிர்ப்புத் தெரிவித்தனர். திடீரெனக் கலகம் ஆரம்பித்து கல் வீச்சுக்கள் இடம்பெற்றதுடன் கைதிகளை நோக்கி சிறை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.


இங்கு இடம்பெற்ற மோதல்கள் மற்றும் பல மணிநேர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பெருமளவாயிருக்கலாமெனக் கூறப்பட்ட போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. நால்வரின் இறந்த உடல்களைத் தாம் பார்த்ததாக கைதி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.


அனுராதபுரம் சிறைச்சாலையில் 70 வரையான தமிழ் அரசியல் கைதிகள் தனிப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். கைதிகளின் போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் பங்கெடுத்துக் கொள்ளாததால், சில கைதிகள் தமிழ்க் கைதிகளை நோக்கியும் கல் வீச்சுக்களை நடத்தியதாக பிபிசி தமிழோசைக்கு தமிழ் கைதி ஒருவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்து உள்ளார்.


இத்தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூலம்[தொகு]