அப்பல்லோ 11 ஐ ஏவிய ராக்கெட் இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 29, 2012

அப்பல்லோ 11 ஐ நிலவுக்கு ஏவிய ஏவுகலனின் எஃப்-1 இயந்திரங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெசோசு அறிவித்துள்ளார்.


அப்பல்லோ 11 ஐக் கொண்டு சென்ற சட்டர்ன் ஏவுகலனின் இரண்டாவது கட்ட ஏவுதல்

அத்திலாந்திக் பெருங்கடலில் 14,000 அடி ஆழத்தில் ஐந்து இயந்திரங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாக பெசோசு தனது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார். இவற்றில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மேலே கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளார்.


1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 விண்கலம் விண்வெளி வீரர்களை முதற்தடவையாக நிலவுக்குக் கொண்டு சென்றது. சட்டர்ன் என்ற அப்பல்லோவின் ஏவுகலனில் எஃப்-1 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இது அப்பல்லோ விண்கலத்தை பூமியின் வளிமண்டலத்துக்கு வெளியே கொண்டு சென்றது. இரண்டாம் கட்ட ஏவுதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இவை எரிந்து பூமியில் அத்திலாந்திக் கடலில் வீழ்ந்தன.


நாசாவுக்குச் சொந்தமான இந்த ஏவுகலன் இயந்திரங்களில் ஒன்றைத் தமது சொந்த நகரான சியாட்டலில் உள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஜெஃப் பெசோசு நாசாவைக் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.


சில நாட்களுக்கு முன்னர் கனேடிய திரைப்பட இயக்குனர் ஜேம்சு கேமரன் உலகின் மிக ஆழமான பகுதிக்கு சென்று திரும்பி சாதனை படைத்திருந்தார்.


மூலம்[தொகு]