உள்ளடக்கத்துக்குச் செல்

அமீரக ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட 94 பேர் மீது வழக்கு விசாரணை ஆரம்பம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 4, 2013

ஐக்கிய அரபு அமீரக அரசைக் கவிழ்ப்பதற்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 'அனைத்து அமீரகம்' என்ற இசுலாமிய இயக்கத்தினர் பலர் கடந்த ஆண்டு தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்துக் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர் தலைவர்கள் ஆகியோரும் அடங்குவர். 12 பெண்களையும் உள்ளடக்கிய இக்குழுவினர் குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில், இவர்களுக்கு மேன்முறையீடு செய்யமுடியாத குறைந்தது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் அபுதாபியில் அமைந்துள்ள நடுவண் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமானது.


இக்குழுவினர் முசுலிம் சகோதரத்துவம் அமைப்புடன் தொடர்புடைய இரகசியக் குழு என அமீரக அரசு குற்றம் சாட்டியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் அல் இஸ்லா என்ற பழமைவாத சமய அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். அமீரகத்தை ஆளும் மன்னர் குடும்பத்தினரை அகற்றி விட்டு பதிலாக கடுமையான சரியா இசுலாமியச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளும் இசுலாமிய அரசு ஒன்றை நிறுவிவதே இவ்வமைப்பின் நோக்கம் என விமரிசகர்கள் கருதுகின்றனர். ஆனால் இக்குற்றச்சாட்டை மனித உரிமை ஆர்வலர்கள் மறுத்துள்ளனர்.


"எமக்குத் தெரிந்த வரையில் அல் இஸ்லா அமைப்பு பாரம்பரிய இசுலாமியக் கொள்கைகளைக் கொண்ட ஒரு அமைதியான மக்கள் நிறுவனம்," என மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த நிக் மெக்கீகன் பிபிசிக்குத் தெரிவித்துள்ளார். கைதிகள் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

[தொகு]