உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்கக் கீழவை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 9, 2011

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் காபிரியேல் கிபர்ட்ஸ் நேற்று சனிக்கிழமை அரிசோனா மாநிலத்தில் டக்சன் என்ற இடத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோது சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்பது வயதுச் சிறுமி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்தனர்.


படுகாயமடைந்த காங்கிரஸ் உறுப்பினர் கிஃபர்ட்ஸ்

சேஃப்வே பல்பொருள் அங்காடித் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற [[w:மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|சனநாயகக் கட்சி ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே இனந்தெரியாத நபர் காபிரியேல் மீது தானியங்கித் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டார். இதில் காபிரியெலின் தலையில் குண்டு பாய்ந்தது. அவருடன் அருகிலிருந்த அமெரிக்கத் தலைமை நீதிபதி, மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர்.


இந்நிகழ்வில் 40 அகவையுடைய காபிரியெலும் இறந்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் முன்னர் தகவல் வெளியிட்டிருந்த போதும் அவரது பொது விவகாரங்களுக்கான செயலாளர் இச்செய்தியை மறுத்துள்ளார். காபிரியேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆபத்தான கட்டத்தில் காபிரியேல் உயிருக்கு போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட காபிரியேல் உயிருடன் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழக மருத்துவமனைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரே ஒரு குண்டு மட்டுமே காபிரியேலைத் தாக்கியுள்ளதாகவும், ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இத்தாக்குதலை மேற்கொண்ட நபர் 22 வயதான ஜாரெட் லோஃப்னர் என்ற இளைஞர் என்றும் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


காபிரியேல் கிஃபர்ட்ஸ் ஒரு "அசாதாரணப் பொது ஊழியர்" என அரசுத்தலைவர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டினார்.


அரிசோனாவிலிருந்து செனட் சபைக்கு தெரிவான மிக இளம்வயது பெண்மணியாகவும், அரிசோனாவின் முதல் யூத இனப் பெண்மணியாகவும், வாசிங்டனுக்கான மூன்றாவது செனெட் பிரதிநிதியாகவும் உள்ள காபிரியல், அரசுத்தலைவர் பராக் ஒபாமாவின் மருத்துவத் திட்டத்துக்கு ஆதரவு அளித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மூலம்