உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இரட்டைக் குண்டுவெடிப்பு, மூவர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:

செவ்வாய், ஏப்பிரல் 16, 2013

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நேற்று இடம்பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் நிறைவுக்கோட்டிற்கு அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.


சென்ற ஆண்டு பாஸ்டன் மாரத்தான் ஓட்டப்போட்டியின் நிறைவுக்கோடு.
படிமம்: BU Interactive News.

குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரம் பிற்பகல் 2:50 மணிக்கு இடம்பெற்றது. 17 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களில் 8 வயதுச் சிறுவன் ஒருவனும் அடங்கியுள்ளான். அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.


இக்குண்டுத்தாக்க்ய்தலுக்கு எவரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் நாம் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என அரசுத்தலைவர் பராக் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றித் தெரிவித்தார்.


முதலாவது குண்டு உள்ளூர் நேரம் 14:50 மணிக்கு (18:50 ஒசநே) பாலிஸ்டன் சாலைக்கு வடக்கே இடம்பெற்றுள்ளது. வெற்றியாளர்கள் நிறைவுக் கோட்டைத் தாண்டி இரண்டு மணி நேரத்தில் இது வெடித்தது. சில ஓட்டக்காரர்கள் தரையில் வீழ்ந்தார்கள். காவல்துறையினரும், ஏனையோரும் குண்டுவெடிப்பில் சிக்கியோருக்கு உதவிக்கு விரைந்தார்கள். சில செக்கன்களுக்குப் பின்னர் 50 மீட்டர்கள் தொலைவில் மக்கள் குழுமியிருந்த இடம் ஒன்றில் அடுத்த குண்டு வெடித்தது.


சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பாஸ்டன் காவல்துறை ஆணையாளர் எட்வர்ட் டேவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்களை அவர் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பாஸ்டன் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆண்டுதோறும் நிகழும் பாஸ்டன் மாரத்தான் போட்டியில் இவ்வாண்டு 23,000 ஓட்டக்காரர்கள் பங்குபற்றினர். பல்லாயிரக்கணக்கானோர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். 1775 ஆம் ஆண்டின் அமெரிகப் புரட்சியின் முதல் சமர்களை நினைவு கூரும் முகமாக 1897 ஆம் ஆண்டு முதல் நாட்டுப்பற்றாளர் நாளில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.


பாஸ்டன் குண்டுவெடிப்புகளை அடுத்து, வரும் ஞாயிறன்று லண்டனில் இடம்பெறவிருக்கும் லண்டன் மாரத்தான் போட்டிகளின் பாதுகாப்புத் திட்டங்களை லண்டன் காவல்துறையினர் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

குண்டுவெடிப்புக்குப் பின்னர்.
படிமம்: Ashstar01.




மூலம்

[தொகு]