அமெரிக்காவும் யூரேசியாவும் வடமுனையில் ஒன்றிணையும், அறிவியலாளர்கள் கணிப்பு
- 9 செப்டெம்பர் 2013: உலகின் மிகப் பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது
- 22 ஏப்பிரல் 2013: சீனாவின் யாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கண்டுள்ளனர்
- 20 ஏப்பிரல் 2013: ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்
- 18 மார்ச்சு 2013: உலகின் மிக ஆழமான கடலான மரியானா அகழியில் 'நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுகின்றன'
- 20 செப்டெம்பர் 2012: சைபீரியாவில் பல கோடிக்கணக்கான காரட்டு வைரங்கள் நிறைந்த மாபெரும் வயல் கண்டுபிடிப்பு
வெள்ளி, பெப்பிரவரி 10, 2012
அமெரிக்கா கண்டமும், யூரேசியாவும் 50 முதல் 200 மில்லியன் ஆண்டுகளில் வட முனைக்கு மேலாக ஒன்றுடன் ஒன்று மோதும் என யேல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். அத்துடன் ஆப்பிரிக்காவும் ஆத்திரேலியாவும் எதிர்காலத்தில் இணையும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக பாங்காயா எனப்படும் ஒரு பெரும் கண்டமாக உருவெடுத்ததாக நம்பப்படுகிறது. பூமியின் கண்டத்தட்டுகள் தொடர்ச்சியாக நகர்ந்து வருவதால், பூமியின் நிலப்பகுதிகளும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன. இதன் காரணமாக ஐசுலாந்து உருவாகிய நடு அத்திலாந்திக் முகடு போன்ற பகுதிகள், மற்றும் சப்பானியக் கரைக்கப்பால் உள்ள பகுதிகள் உருவாயின. அத்துடன், 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நூனா என்ற கொலம்பியாக் கண்டமும், பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ரொடீனியா கண்டமும், 300 மில். ஆண்டுகளுக்கும் முன்னர் பாஞ்சியா கண்டமும் உருவாகியதாக நிலவியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காக்களும், ஆசியாவும் இணைந்து அடுத்து உருவாகப் போகும் மீப்பெரும் கண்டத்திற்கு அமாசியா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று இவ்வார நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
"எமது ஆய்வின் படி, கரிபியன் கடல் மூடப்பட்டு வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் இணையலாம், ஆர்க்டிக் பெருங்கடல் மூடப்பட்டு அமெரிக்காக்களும் ஆசியாவும் இணையலாம்," என யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் ரொஸ் மிட்ச்செல் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். அமெரிக்காக்களை நாம் பசிபிக் எரிமலை வளையத்தினுள் சேர்க்கலாம். ஐரோப்பா, யூரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதி, ஆப்பிரிக்கா மற்றும் ஆத்திரேலியா ஆகியன இணைந்து ஒரு பெருங்கண்டமாக மாறும், அண்டார்க்டிக்கா தனியே விடப்படும் எனவும் அவர் கூறினார்.
மூலம்
[தொகு]- America and Eurasia 'to meet at north pole', பிபிசி, பெப்ரவரி 8, 2012
- Supercontinent Amasia To Join America & Eurasia In 50 To 200 Million Years, ஏசியன் சயண்டிஸ்ட், பெப்ரவரி 9, 2012
- Supercontinent cycles and the calculation of absolute palaeolongitude in deep time, நேச்சர், பெப்ரவரி 8, 2012