அமெரிக்க சீக்கியக் கோவிலில் துப்பாக்கிச் சூடு, ஏழு பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 6, 2012

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் உள்ள சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


அமெரிக்காவில் விஸ்கொன்சின் மாநிலம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குள் புகுந்த துப்பாக்கி மனிதன் அங்கு வழிபாட்டிற்காகக் குழுமியிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்த காவல்துறை அதிகாரி அங்கு விரைந்த போது அவரை நோக்கியும் கொலையாளி பலமுறை சுட்டுள்ளான். பின்னர் அங்கு விரைந்த இரண்டாவது காவல்துறை அதிகாரி கொலையாளியைச் சுட்டுக் கொன்றார். காவல்துறையினர் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்தனர்.


விஸ்கொன்சின் சீக்கியக் கோயிலில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள குடாகி நகரில் உள்ள கொலையாளியின் வீடு காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. கொலையாளி வெள்ளை இனத்தவர் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இது ஒரு உள்ளூர்த் தீவிரவாதம் என்றே காவல்துறையினர் கணித்துள்ளனர்.


9/11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இவ்வாறான தாக்குதல் தமக்கு நிகழக்கூடும் என்ற அச்சத்தில் தாம் வாழ்ந்து வந்ததாக விஸ்கொன்சில் மாநிலத்தில் வதியும் சீக்கிய மக்கள் தெரிவித்தனர். "தம்மை தலிபான்களின் உறுப்பினர்கள் என்றோ அல்லது பில் லாதினின் ஆட்கள் என்றோ தவறுதலாகக் கருதுகின்றனர்," என ரஜ்வந்த் சிங் என்பவர் தெரிவித்தார். சீக்கியர்களைத் தவறுதலாக முசுலிம்கள் என நினைத்து ஆங்காங்கே இவர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.


அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்றைய தாக்குதலில் இறந்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]