உள்ளடக்கத்துக்குச் செல்

அமைச்சர் விமல் வீரவன்ச உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 9, 2010


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடந்த ஆண்டு இறுதிக் கட்டப்போரில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐநா செயலர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவைக் கலைக்க வேண்டும் என்று கோரி இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தின் முன்னால் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.


இந்த உண்ணாநோன்புப் போராட்டத்துக்கு பல பௌத்த பிக்குகள் ஆதரவும் ஆசியும் வழங்கியுள்ளனர்.


இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

—பான் கி மூன், ஐநா செயலர்

அவர் போராட்டம் மேற்கொண்டிருக்கும் இடத்துக்கு அருகில், பான் கி மூனின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு அதன் கீழ் அவரை அவமதிக்கும் வகையில் தகாத வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், ஐநாவின் நிபுணர் குழுவில் இருக்கும் மூவரின் படங்களும் இதே போல அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டு, அதற்கு கீழ் “மூன்று முட்டாள்கள்” என்கிற வாசகம் எழுத்தப்பட்டுள்ளது என பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.


இதற்கிடையில், இந்த முற்றுகையைத் தடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடு்க்கத் தவறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பான் கி மூன், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட பிராந்திய அலுவலகத்தை மூட உத்தரவிட்டார். அத்துடன் இலங்கையிலுள்ள ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூன் அவர்களை ஆலோசனைக்காக நியூயோர்க் வரும்படி பான் கீ மூன் அழைத்துள்ளார்.


"இலங்கை அரசு தனது கடப்பாடுகளை உணர்ந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்," என ஐநா தலைமைச் செயலர் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.


இன்றைக்குள் இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இது தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் நேற்று நீல் புனேயுடன் பேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]