உள்ளடக்கத்துக்குச் செல்

அரசுத்தலைவருக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டம்பர் 9, 2010

இலங்கையின் அரசுத்தலைவர் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இலங்கை அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலம் தற்போதைய அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு சர்வாதிகார ஆட்சிப் பலத்தைக் கொண்டுவர வழி சமைக்கும் என அரசியல் விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.


அரசுத்தலைவரின் அதிகாரங்களும் இந்த அரசியமைப்புத் திருத்தம் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ளன,


225 பேரைக் கொண்ட நாடாளுமன்றைத்தில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் அளிக்கப்பட்டன. சட்டப்பிரேரணை இரண்டாம் வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேறியது.


முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற அமர்வில் நேற்று பங்கேற்காமல் பகிஷ்கரித்த நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் அரசு பக்கத்துக்குச் சென்றதுடன் ஆதரித்து வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட உறுப்பினர் பொடியப்பு பியசேன ஆதரித்து வாக்களிக்க ஏனையோர் எதிர்த்து வாக்களித்தனர்.


சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் (ஜே.வி.பி.உட்பட) எதிர்த்து வாக்களித்தனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 8 உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்தனர். இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க.சின்னத்தில் போட்டியிட்ட ஜே. ஸ்ரீரங்கா சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.


ஐ.ம.சு.மு.அரச எம்.பி.க்கள் 144 பேருடன் ஐ.தே.க.சின்னத்தில் போட்டியிட்டு கடந்த மாதம் அரசு பக்கம் சென்ற திகாம்பரம், பிரபா கணேசன் மற்றும் ஐ.தே.க.வின் 6 எம்.பி.க்கள், 8 மு.கா.எம்.பி.க்கள், தமிழ்க் கூட்டமைப்பின் பியசேன உட்பட 161பேர் 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணியாளர்கள், மனித உரிமை மற்றும் பல முக்கிய அதிகாரிகளை நியமிக்க அரசுத்தலைவருக்கு இச்சட்டமூலம் வழிவகுக்கிறது.


இந்த சட்டமூலத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி ஆர்வலர்கள் தலைநகர் கொழும்பில் இன்று பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதேவேளை அரசாங்க ஆதரவாளர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.


ஐக்கிய தேசியக் கட்சி ஊர்வலம் ஸ்ரீ கொத்தாவிலிருந்து புறப்பட்டு பங்களா சந்திக்கு வந்த போது பொலிஸார் இரும்பு வேலிகளைப் போட்டு தடுத்து நிறுத்தினர். எனினும் ஊர்வலத்தில் கலந்துகொண்டோரை ஆத்திரமடைய வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்த இடத்தில் அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

மூலம்[தொகு]