உள்ளடக்கத்துக்குச் செல்

அலபாமா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேராசிரியர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 14, 2010


அமெரிக்காவில் அலபாமா பல்கலைக்கழகத்தில் பெண் பேராசிரியர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் அமெரிக்கா வாழ் இந்தியப் பேராசிரியர் ஆவார்.


அலபாமா மாநிலம்

அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ஸ்வில் பகுதியில் உள்ள அலபாமா பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளி மாலை உயிரியல் துறை சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


அப்போது அந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் எமி பிஷப் என்ற பெண் பேராசிரியரே திடீரென எழுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேராசிரியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரியல் துறைத் தலைவர் மற்றும் அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் கோபி பொடில்லா ஆகியோர் இறந்தவர்களில் அடங்குவர். 2 பேர் படுகாயமடைந்தனர்.


காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இந்தப் பேராசிரியருக்கு பதவி உத்தரவாதத்தை வழங்கும் விதமான பதவி உயர்வு ஒன்று முன்னர் மறுக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் செய்திகள் கூறுகின்றன.


இப்பெண் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 18 வயது சகோதரரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக இப்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது இவ்விறப்பு ஒரு தற்செயலான நிகழ்வு என தீர்ப்புக் கூறப்பட்டது. அலபாமா பல்கலைக்கழகச் சூட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாமென பிபிசி செய்தி கூறுகிறது.

மூலம்