அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, திமுக நாடாளுமன்ற கனிமொழி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 409ன் கீழ் நம்பிக்கை துரோக வழக்கை நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.


அத்துடன் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், ராசாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா, கரீம் மொரானி உள்பட 17 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120ன் கீழ் கிரிமினல் சதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


இவர்கள் மீது ஊழல், ஏமாற்றியது, உயர்பதவியை தவறாக பயன்படுத்தியது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரிவு 409ன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை தண்டனை கொடுக்கப்படலாம்.


குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக நீதிபதி குற்றவாளிகளிடம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் எதுவும் படிக்கவில்லை என்று தெரிவித்தனர். உடனே நீதிமன்றத்தில் இருந்து படிக்கவும் என்று நேரம் ஒதுக்கினார். இது 700 பக்கங்களை கொண்டதாக இருந்தது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11-ம் தேதி ஆரம்பிக்கும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.


மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, பிணை கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கனிமொழி உள்ளிட்டோரின் பிணை மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.


இதனிடையே, டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சனிக்கிழமை காலை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். பின்னர், திகார் சிறையில் தனது மகள் கனிமொழியைப் பார்த்தார்.


மூலம்[தொகு]