ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் வாங்கினார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 17, 2010


இந்தியாவைக் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் ஆண்டு வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியை சஞ்சீவ் மேத்தா என்ற இந்தியத் தொழிலதிபர் 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் விலைக்கு வாங்கியுள்ளார்.


ஆரம்பகாலக் கிழக்கிந்தியக் கம்பனியின் கொடி

கிழக்கிந்தியக் கம்பெனியை அவர் வாங்குவதற்கு கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டுள்ளார். 2004ம் ஆண்டிலேயே அந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கினார் மேத்தா.


இந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அருங்காட்சியகங்கள், தொல்பொருள் மையங்களுக்குச் சென்று விரிவான தகவல்களை சேகரித்துள்ளார் மேத்தா.


1600 டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்தியக் கம்பெனி தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார். தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


இதனையடுத்து இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி. படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரித்தானிய அரசு.


1874ம் ஆண்டு ஜனவரி 1 இல் இங்கிலாந்து அரசு கம்பெனியை கலைத்து அனைத்து அதிகாரங்களையும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றியது. அதன் பின்னர் அந்த நிறுவனம் முடங்கிப் போனது.


மும்பையில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் 48 வயதாகும் மேத்தா கம்பனியின் விற்பனையகத்தை முதலில் மேபேர் பகுதியில் தொடங்கவுள்ளார். அடுத்து லண்டனில் ஒரு கிளை பரப்புகிறார்.


நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

—சஞ்சீவ் மேத்தா

இது தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கிளைகளைக் கொண்டு போகப் போகிறாராம் மேத்தா.


இந்த வர்த்தகக் கிளைகளில் காபி, தேயிலை, நறுமணப் பொருட்கள், இனிப்பு வகைகள், தோல் பொருட்கள், மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேத்தா.


தனது சாதனை குறித்து மேத்தா கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய சாதனையாகும். எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை வாங்கி விட்ட பெருமை உள்ளது. நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

மூலம்